ஓராண்டுக்கு பசி தாங்கும்... 122 டிகிரி வெயில் தாங்கும்... அதிசய மெத்தைப் பூச்சி

ஓராண்டுக்கு பசி தாங்கும்... 122 டிகிரி வெயில் தாங்கும்... அதிசய மெத்தைப் பூச்சி

மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.

திசய ஒட்டுண்ணி மூட்டைப்பூச்சி. நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். 3 மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று வந்தாலும், நம் வீட்டில் நமக்காக பசி தாங்கி காத்துக் கொண்டிருக்கும். மூட்டைப்பூச்சி களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா...


 மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இல்லாத இடமேயில்லை எனும் அளவுக்கு எல்லா இடங்களிலும் வசிக்கும் திறன் பெற்றவை மூட்டைப்பூச்சிகள். ஓட்டல்கள், வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பள்ளிகள், வாகனங்கள், தியேட்டர்கள் என மனிதர்கள் வசிக்கும் எங்கும் மூட்டைப்பூச்சிகளும் வாழ்கின்றன.


 பெரும்பாலும் இருக்கைகள், மெத்தை படுக்கையைச் சுற்றி எந்த இண்டு, இடுக்கிலும் அவற்றால் வசிக்க முடியும். எனவே இதை ஆங்கிலத்தில் ‘மெத்தைப் பூச்சி’ என்று பொருள்படும் வகையில் ‘பெட் பக்ஸ்’ என்றே அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் ‘சிமெக்ஸ் லெக்சூலரியஸ்’. ‘சிமிசிடாயி’ உயிரியல் குடும்பத்தை சேர்ந்தது.


 வீடுகளில் 89 சதவீதமும், அடுக்கு மாடி குடியிருப்புகளில் 88 சதவீதமும், ஓட்டல்களில் 67 சதவீதமும், கல்லூரிகளில் 35 சதவீதமும், பயண இடங்களில் 9 சதவீதமும், 4 சதவீதம் தியேட்டர்களிலும் மூட்டைப்பூச்சி கடி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.மூட்டைப்பூச்சிகளிடம் உள்ள ஒரே நல்ல பண்பு, வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மட்டுமே ரத்தம் உறிஞ்சும். ஒருமுறை பசியாற்றிக் கொள்ளும் மூட்டைப்பூச்சி அடுத்ததாக 5 முதல் 10 நாட்களுக்கு மீண்டும் ரத்தம் உறிஞ்சுவதில்லை. தனக்கு பசியெடுக்கும் வரை அவை இனப்பெருக்க வேலைகளில் ஈடுபடும் அல்லது ஓய்வெடுக்கும்.

 ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கக்கூடியது மூட்டைப்பூச்சி. கர்ப்ப காலத்தில் தினமும் 5 முதல் 10 முட்டைகள் இடும். ஒரு பெண் மூட்டைப்பூச்சி, தன் 6 மாத ஆயுள் காலத்தில் சுமார் 400 குஞ்சுகள் பொரிக்கும்.