எடப்பாடியின் முதல்வர் பதவி நீடிக்குமா?

எடப்பாடியின் முதல்வர் பதவி நீடிக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியினரின் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒரே தலைமை இருப்பதே சிறந்தது என்று கூறியே முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய அதிமுக தலைமை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவமே அதிமுக இரண்டாக பிளவுபட அச்சாரமாக அமைந்தது. இதையடுத்து 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்துக்குப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முதலமைச்சர் பதவியேற்கும் எண்ணமில்லை என்று தெரிவித்தார். ஆனால், டிடிவி தினகரன் வெற்றிபெறும் பட்சத்தில் அவரே முதல்வராகவும் பதவியேற்பார் என்றே அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.