நடிகை பாவனா கடத்தல் விவகாரம்: மலையாள நடிகர் திலீப் விரைவில் கைதாகிறார்?

நடிகை பாவனா கடத்தல் விவகாரம்: மலையாள நடிகர் திலீப் விரைவில் கைதாகிறார்?

நடிகை பாவனாவைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு பிடிபட்ட பின்னர், வழக்கு விசாரணையில் தனிப்படை ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையிலான போலீஸார் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் திலீப் மீதான சந்தேகம் வலுத்து வருகிறது.

மேலும் இயக்குநர் நாதிர்ஷா, நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், அவரது தாய் ஷியாமளா ஆகியோர் மீதும் போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கொச்சியில் ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா உட்பட வழக்கில் தொடர் புடையதாகச் சந்தேகப்படும் நபர் களைக் கைது செய்வது தொடர் பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

வழக்கு தொடர்பாக அம்மாநில டிஜிபி லோக்நாத் பெகரா கூறுகையில், ‘நடிகை பாவனா பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ எங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டது. இந்தச் சம்பவத்தில் சில முக்கியப் புள்ளிகள் மீது சந்தேகம் உள்ளது. வலுவான ஆதாரம் கிடைத்தவுடன் கைது நடவடிக்கை இருக்கும்’ என்றார்.

இந்நிலையில் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் ஸ்ரீகுரும்பா தேவி கோயிலில் ரகசியமாக சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவரும், பிரபல நடிகருமான இன்னசென்ட் கூறும்போது, ‘நடிகை பாவனா கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் நடிகர் திலீப்பின் சகோதரர் அனுப்பிடமும், நடிகர் தர்மாஜன் போல்கட்டியிடமும் நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர். ‘சிலருடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்களைக் காட்டி அவர்களைத் தெரியுமா என போலீஸார் விசாரித்தனர். நடிகர் என்பதால் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். அப்படி இருக்கும்போது அவர்களை எங்களுக்கு எப்படித் தெரியும்’ எனத் தான் கூறியதாக தர்மாஜன் போல்கட்டி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்த னர். இதையடுத்து அவரிடம் 5 நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது