ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்தை தோற்கடித்து டெல்லி அணி 5-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்தை தோற்கடித்து டெல்லி அணி 5-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்தை தோற்கடித்து டெல்லி அணி 5-வது வெற்றி

கான்பூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன.

இந்த நிலையில் கான்பூர் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ்-ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் சந்தித்தன. இது ஒரு சம்பிரதாய மோதலாகும். டெல்லி அணியில் ரபடா நீக்கப்பட்டு பிராத்வெய்ட் இடம் பெற்றார். குஜராத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 13 ரன்னுடனும் (7 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), பவுல்க்னெர் 14 ரன்னுடனும் (8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் முகமது ஷமி, கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, பிராத்வெய்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 57 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 96 ரன்கள் எடுத்து மயிரிழையில் சதத்தை கோட்டைவிட்டாலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 13-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஒரு இடம் முன்னேறியது. தோல்வி கண்ட குஜராத் அணி ஒரு இடம் சறுக்கியது.